×

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டியளித்தார். கூட்டணி கட்சிகளுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்தார். தேர்தல் அறிவித்த பிறகு மக்களை சந்தித்து வெற்றி பெறுவது தான் ஜனநாயகம் என்றும், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து வார்டுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை விரைவில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டு முறைகளை முறையாக பின்பற்றவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதே சமயம்,  விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


Tags : Edappadi Palanisamy ,Coalition Parties ,Tamil Nadu ,State Election Commission ,Local Elections ,AIADMK , Tamil Nadu, Local Elections, AIADMK, Coalition Parties, State Election Commission,
× RELATED தைப்பொங்கல் திருநாளில் உழவு...