ஐதராபாத் என்கவுண்டர் விவகாரம்: பொதுமக்கள் பாராட்டு, என்கவுன்டர் தான் தீர்வா? என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்றதால் 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். கடந்த 27ம் தேதி ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாக இருந்த கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரும் கைது செயய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இந்த 4 பேரையும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர். தற்போது, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகளின் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளனர். இந்த என்கவுண்டர் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி:

என்கவுன்டரை கேள்விப்பட்ட மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஹைதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் சாலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசை பார்த்து கைகாட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொதுமக்கள் பாராட்டு:

குற்றவாளிகள் மீது என்கவுன்டர் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது மலர்தூவி பாராட்டுகளை தெரிவித்தனர். 4 பேரையும் என்கவுண்டர் செய்த காவல் துணை ஆணையர் வாழ்க, உதவி ஆணையர் வாழ்க என பொதுமக்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஐதராபாத் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

நிர்பயா தயார்:

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நிர்பயாவின் தாய் வலியுறுத்தியுள்ளார்.

திமுக எம்.பி கருத்து:

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில் நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதே வேளையில் என்கவுன்டர் தான் இதற்கு தீர்வா என கேள்வி எழுகிறது என்று கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் 4 பேருக்கும் இந்த தண்டனை கிடைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். என்கவுண்டர் என்பது நம் ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

எம்.பி திருநாவுக்கரசர்:

குற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது என்று திண்டுக்கல்லில் திருநாவுக்கரசர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜக வானதி சீனிவாசன்:

இது தொடர்பாக பேசிய, பாஜக மாநில பொதுச்செயலாளர் இந்த விவகார மக்களின் உணர்வு கொந்தளிப்பு போன்றவற்றை மாநில அரசாங்கம் கையாளுவதற்காக இதனை செய்திருக்கிறதா? என்ற ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை எனக் கூறினார். இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை கிடைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். ஆனால் அரசாங்கம் மக்களுக்கு ஏதேனும் ஒரு பதில் சொல்லியாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரியவருகிறது. ஆனால் நீதித்துறையின் உத்தரவுப்படி செல்வதுதான் என்றைக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்:

வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடம் என 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுத்திய காவல்துறைக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: