பாபர் மசூதி இடிப்பு தினம்; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

சென்னை: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடம் என்று கூறி அயோத்தியில் பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய அரசியலையே புரட்டிப்போட்டது. அதோடு பல வருடங்கள் அயோத்தி வழக்கும் நடந்து வந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த சில வாரங்கள் முன் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கபபடுகிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் கேமரா மூலம் பயணிகளை  கண்காணித்து வருகின்றனர். எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம், பொது மக்கள் அதிகம் கூடும் இடம், பொழுது போக்கு மையங்கள், கோயில், தேவாலயங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து பொது மக்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி போலீசாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ‘சந்தேகப்படும்படியான பொருட்கள் கிடந்தால் அவற்றை எடுக்க வேண்டாம், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.

Related Stories: