இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

புதுடெல்லி: டாக்டர் அம்பேத்கர் 63வது நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். குடியரசு தலைவர்  பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அம்பேத்கர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

Advertising
Advertising

அரசியல் சாசன தந்தையின் வரலாறு:

அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார். பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். கடந்த 1915ல் ‘‘பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’’ என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.

கடந்த 1921ம் ஆண்டு ‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’’ என்ற ஆய்வுக்கு முதுகலை அறிவியல் பட்டமும், கடந்த 1923ம் ஆண்டு ‘‘ரூபாயின் பிரச்னை’’ என்ற ஆய்வுக்கு ‘‘டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். கடந்த 1923ம் ஆண்டுக்கு பின் இந்தியா திரும்பிய அம்பேத்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கடந்த 1927ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு கடந்த 1930 ம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார். ஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது.

நவம்பர் 26, 1949-ம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1951ம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.  பவுத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டு, 1950ம் ஆண்டுக்கு பிறகு பவுத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். பிறகு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர், 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார். மறைவுக்கு பிறகு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் மரியாதை:

இத்தகைய மாமேதையின் நினைவு தினத்தையொட்டி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேதகரின் படத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதையை செலுத்தினர்.

Related Stories: