மதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு

மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மதுரை, கே.கே. நகர் தேசிய நெடுஞ்சாலை  ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலை நிறுவும் பணி, கடந்த 2 மாதங்களாக ரகசியமாக நடந்து வந்தது.  இங்கு சிலை நிறுவ பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில், ரவுண்டானாவை அழகுபடுத்தா விட்டாலும் பரவாயில்லை. விடிந்தால் யாரேனும் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவார்கள் எனக்கருதி,  உடனே சிலையை திறக்க அதிமுகவினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம்  இரவு அவசர கோலத்தில், ரவுண்டானாவை சுற்றியிருந்த தடுப்பு தகரங்களை அகற்றினர். ஜெயலலிதா சிலையை மூடியிருந்த துணிகளை அகற்றினர்.

Advertising
Advertising

அலங்கார மின் விளக்குகளை சிலைகளை சுற்றி எரிய விட்டு, அதிமுக கொடிகளை கட்டி வைத்தனர். இரவில் திறக்கப்பட்ட ெஜயலலிதா சிலைக்கு நேற்று காலை 11 மணி வரை யாரும் மாலை போடவில்லை.  சிலை அருகே போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும் ெஜயலலிதாவின் நினைவு நாளான நேற்று முதல்வர், துணை முதல்வர், சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தகவல் தெரிந்து கொண்ட அதிமுகவினர், பிறகு  காலை 11.15 மணிக்கு மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா தலைமையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர்.    இதே இடத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை நிறுவ அனுமதி கோரி பல ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா சிலையை மட்டும் திடீரென்று நிறுவியது எப்படி என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: