மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்ட சுவர் முழுமையாக இடிப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமாக இருந்த காம்பவுண்ட் சுவரின் மறுபக்கம் இடித்து அகற்றப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த 2ம் தேதி வீடுகள் மீது, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட  17 பேர் பலியானார்கள். இந்த உயிர்ப்பலிக்கு காரணமாக இருந்த காம்பவுண்ட் சுவரின் உரிமையாளர் ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் (60) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  பாதி இடிந்த நிலையில் அபாயகரமாக நீண்டிருக்கும் மீதமுள்ள காம்பவுண்ட் சுவரை இடிக்க வேண்டும் என நடூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின்படி மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நில அளவையாளர்கள் நேற்று முன்தினம் அந்த இடம் முழுவதையும் அளந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த நில அளவை நடந்தது. ஜவுளிக்கடை உரிமையாளர், அவரது எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளாரா? சுற்றியுள்ள இடங்களையும் ஆக்கிரமித்து கட்டியுள்ளாரா? என ஆய்வு செய்தனர்.

Advertising
Advertising

ஆய்வு முடிவில், ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. ஆனால், தரமின்றி காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, மீதமுள்ள அந்த காம்பவுண்ட் சுவரை இடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக களத்தில் இறங்கினர். 2 பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து, பலம் இழந்த காம்பவுண்ட் சுவர் முழுவதையும் இடித்து அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த இடிப்பு பணி நடந்தது. இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.    இதேபோல், அருகில் உள்ள மற்றொரு தனியாருக்கு சொந்தமான 15 அடி உயர காம்பவுண்ட் சுவரையும் இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டியவாறு 12 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என நில அளவையர்கள் சான்றிதழ் அளித்தனர். இதையடுத்து, இந்த காம்பவுண்ட் சுவரும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.

இது பற்றி மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் கட்டிடங்கள் மற்றும் காம்பவுண்ட் சுவர்கள் ஆய்வு செய்யப்படும். அவை, தரமின்றி, மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்தால், அவையும் இடித்து அகற்றப்படும்’’ என்றனர். ஆணைய தலைவர் விசாரணை: இதனிடையே, மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிர்ப்பலியான இடத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ராம்சங்கர் காத்தரியா, துணை தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Related Stories: