ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீண்டும் தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்: காற்றழுத்த தாழ்வுநிலையால் அனுமதி ரத்து

ராமேஸ்வரம்: காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தப்பட்டன. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று முதல் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தெற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி அனுமதி டோக்கன் நேற்று வழங்கப்படவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 800 விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று முன்தினம் காலை பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். மீனவர்களின் படகுகளில் அதிகபட்சமாக 100 கிலோ வரை இறால் மீன்கள் இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : fishermen ,Ramanathapuram district ,shore , Ramanathapuram district, fishermen, windsurfing
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது