சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் நாகை இன்ஜினியர் இறக்கவில்லை: வீடியோ காட்சியை காண்பித்து மீட்டு தர கலெக்டரிடம் மனு

நாகை: சூடான் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நாகையை சேர்ந்த இன்ஜினியர் இறந்ததாக தகவல் வந்தது. ஆனால், அவர் தீவிபத்துக்கு முன்பே வெளியேறும் வீடியோ காட்சி வந்துள்ளது. இதை காண்பித்து மகனை மீட்டு தர வேண்டும் என்று பெற்றோர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். சூடான் தலைநகர் கார்டோவில் பாஹ்ரி என்ற இடத்தில் சாலுமி என்ற செராமிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் காஸ்சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் நாகை மாவட்டம் ஆலங்குடிச்சேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் இறந்ததாக அவர்களது குடும்பத்தினருக்கு நேற்றுமுன்தினம் இரவு தகவல் வந்தது. இதையடுத்து அவர்களது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று அதிகாலை ராமகிருஷ்ணனின் சகோதரர் பிரபாகரனின் செல்போனுக்கு சில வீடியோ காட்சிகள் வந்தது. இதில் தீ விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே ராமகிருஷ்ணன் அங்கிருந்து வெளியேறி செல்லும் காட்சிகள் உள்ளது.

இதன்பின்னர், தந்தை ராமலிங்கம், தாய் முத்துலட்சுமி ஆகியோர் நாகை கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், தீ விபத்தில் ராமகிருஷ்ணன் இறக்கவில்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறியுள்ளார். எனவே அவரை இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மீட்டு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய தூதரகத்துக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

Related Stories: