வீடு எழுதி வைக்க வேண்டும் மகளுக்கு வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய தந்தை: மாப்பிள்ளை வீட்டார் வினோத புகார்

மன்னார்குடி: மகள் பெயரில் வீடு எழுதி வைத்தால்தான் திருமணம் நடக்கும் என மணமகன் குடும்பத்தாரிடம் பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக வினோத புகார் அளிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தை சேர்ந்த தனுசு என்பவரின் மகன் அருள்மணிகண்டன் (32). சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் காயத்திரிக்கும் ஜூலை 15ம் தேதி திருச்சியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்படி, கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார் மன்னார்குடியில் உள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து பத்திரிகைகள் அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்தநிலையில், திடீரென திருமணத்தை பெண் விட்டார் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி 1ம் தேதியன்று திருமணம் நடைபெறவில்லை.

இதையடுத்து, மணமகன் அருள்மணிகண்டன், மணப்பெண்ணின் தகப்பனார் நடராஜன் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், திருமணத்திற்கு முதல்நாள் பெண் வீட்டிற்கு மணப்பெண்ணை அழைக்க எனது பெற்றோர் சென்றபோது, அவரது தந்தை நடராஜன் மகள் பெயரில் ரூ.65 லட்சம் மதிப்பில் திருச்சியில் வீடு வாங்கி பத்திரம் பதிவு செய்தால்தான் திருமணம் நடைபெறும் என்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டனர். இந்த சம்பவத்தால் எனக்கும், குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த வினோத புகார் மீது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: