மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் டோல்கேட் அமைத்து வசூலா? ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுமா என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல், வண்டியூரைச் சேர்ந்த வக்கீல் விஜயராஜா ஆகியோர் தனித்தனியே, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேசிய நெடுஞ்சாலை விதிப்படி, நான்கு வழிச்சாலையில் 60 கி.மீட்டர் தூரத்தில் தான் டோல்கேட் மையம் இருக்க வேண்டும். இதில், கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு கி.மீட்டருக்கு 0.65 பைசா தான் வசூலிக்க வேண்டும்.  ஆனால் மதுரையில் மஸ்தான்பட்டியில் இருந்து பரம்புப்பட்டி வரையிலான 27 கி.மீ தூரத்தில் மட்டும் 3 டோல்கேட்கள் உள்ளன. இங்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை விதிகளுக்கு எதிரானது. எனவே, குறைந்த தொலைவிற்குள் 3 டோல்கேட்கள் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இங்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், ‘‘தேசிய நெடுஞ்சாலையில் 60 கி.மீ தொலைவில் தான் டோல்கேட் இருக்க வேண்டும். தற்போது குறைந்த தொலைவில் 3 டோல்கேட்கள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை விதிகளில் இதுகுறித்து எதுவும் தெளிவுபடுத்தவில்லை’’  என்றனர். அப்போது நீதிபதிகள், ‘‘கடந்த 2017 அரசாணையில் 27.2 கி.மீ என்றும், தற்போதைய அரசாணையில் 36 கி.மீ என்றும் உள்ளது. ஆண்டுகள் கூடக்கூட கி.மீ தூரமும் கூடியதா? இப்படியே போனால் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுமா?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய  உத்தரவிட்டு விசாரணையை டிச. 11க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: