×

30 ஆண்டு பணிபுரிந்து இருந்தால் அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சுற்றறிக்கையால் திடீர் அதிர்ச்சி

சென்னை: அரசு ஊழியர்கள் 30 ஆண்டு பணியாற்றினால் அல்லது 50 வயது முடிவடைந்தால், அவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேலைவாய்ப்பு துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கட்டாய ஓய்வு அளிப்பதற்கான திட்டமா என்று அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதுகுறித்து சென்னை, கிண்டியில் உள்ள ேவலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் சார்பில் சென்னை மற்றும் திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் இணை இயக்குநர், முதல்வர்கள், மற்றும் காஞ்சிபுரம், ஓசூர், சென்னை, திருச்சி, பேட்டை பகுதியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
கட்டாய ஓய்வு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் வகையில் கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அலுவலர்களின் உரிய விவரங்களை அனுப்ப வேண்டும்.

அதன்படி, 31-12-2019 உடன் முடிவடையும் ஆண்டிற்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய அ, ஆ மற்றும் இ பிரிவு அலுவலர்கள் 01-01-1969 முதல் 31-12-1969 வரையுள்ள காலத்தில் பிறந்த தேதி வரும் அலுவலர்களும், ``ஈ’’ பிரிவு அலுவலர்களுள் 01-01-1964 முதல் 31-12-1964 வரை பிறந்த தேதியுடைய அலுவலர்களும் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்களாவர். 01-01-1989 முதல் 31-12-1989 வரையுள்ள காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 30 ஆண்டுகள் பணிமுடித்த அலுவலர்களும் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள்.
மேற்குறிப்பிட்ட தேதிகளுள் 50 வயது (அடிப்படை பணியாளர்களுக்கு 55 வயது) முடிவடையும் அல்லது 30 ஆண்டு பணி முடிவடைதல் இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அந்த அலுவலர் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள்.  எனவே, இந்த விவரங்களின் அடிப்படையில் உரிய அலுவலர்களின் பதிவுறுநாட்கள் அனுப்பி வைத்திட வேண்டும் என்று கோரப்பட்டது. எனினும் இதுநாள் வரை முகவரியில் காணும் அலுவலர்களால் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாது உரிய அலுவலர்களின் பதிவுறுநாட்களை அனுப்பி வைத்திட வேண்டும். இந்த பொருள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். 10-12-2019க்குள் விவரம் அனுப்பப்படவில்லையெனில், தங்கள் அலுவலகத்தில் இருந்து கட்டாய ஓய்வு குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அலுவலர், பணியாளர்கள் எவரும் இல்லை என்று கருதப்படும். பின்னர் அறியவரும் நேர்வில் அதற்கான பொறுப்பினை அலுவலக தலைவர்களே ஏற்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் 30 ஆண்டு பணிபுரிந்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்படுவது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் தவறானதாகும். 30 ஆண்டு அல்லது 50 வயதானவர்களின் பணித்திறன் குறித்து ஆய்வு செய்யப்படும். அதில் அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தாலோ அல்லது பணி செய்ய முடியாத நிலையில் இருந்தாலோ விருப்ப ஓய்வு பெற அறிவுரை வழங்கப்படும். அதனால் அரசு ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை” என்றார்.

Tags : servants ,employment director ,retirement , Circular of Public Service, Compulsory Retirement and Employment Department Director
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து