×

செங்குன்றம் அருகே பரபரப்பு: சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் படுகாயம்: அவசர அவசரமாக கட்டப்பட்டதால் ஏற்பட்ட வினை

சென்னை: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஏரி பின்புறம், லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோயில் அருகில் சுமார் 50 சென்ட் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த ஒரு வாரமாக அவசர அவசரமாக நடந்தது. 3 பக்க சுற்றுச்சுவர் பணிகள் முடிந்த நிலையில் ஏரி பின்புறம் கட்டுமானப் பணியில் நேற்று 7 ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் சுமார் 70 அடி நீளம் கொண்ட 10 அடி உயரம் உள்ள சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்தது.  கட்டிட தொழிலாளர்கள் பொத்தூரை சேர்ந்த லோகநாதன் (50), எல்லம்மன்பேட்டையைச் சேர்ந்த பாபு (45), பொத்தூர் வள்ளிவேலன் நகரைச் சேர்ந்த  லலிதா (50), செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த முத்து (40), அதே பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர்கள் செல்லப்பன் (47), தேவராஜ் (65), குமார் (45) உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இவர்களை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் செங்குன்றம் பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற் கட்ட விசாரணையில், இந்த இடம் சென்னை அமைந்தகரை பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான இடம். தற்போது பெய்த மழையால் பம்மதுகுளம் ஏரி நிரம்பி இந்த இடத்துக்கு தண்ணீர் வந்துவிடும் என்று அச்சத்தில் அவசர கதியில் கட்டப்பட்டது என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : emergency building ,wall collapse , Vertical, wall collapses, 7 people injured
× RELATED ராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு