இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்? இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் முக்கிய முடிவு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளு க்கு எத்தனை சீட் வழங்கு வது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத் தில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் 6ம் தேதி (இன்று) முதல் வருகிற 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்வார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 31 மாவட்டங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்களுடன் அந்த கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா உள்ளிட்ட எந்த கட்சிகளும் இதுவரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் அதிமுகவில் உள்ள 56 மாவட்ட செயலாளர்களும் கண்டிப்பாக பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை கூட்டத்தில் தெரிவிப்பார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை, கட்சி தலைமை ஏற்றுக்கொண்டு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், ஊரக உள்ளாட்சி அதிக இடங்களில் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுவது குறித்தும் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், அதிமுக வழங்கும் குறைந்த அளவிலான சீட்டுகளை கூட்டணி கட்சிகள் ஏற்குமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.  வருகிற 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதற்குள் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் பணிகள் முடிவடைய வேண்டும் என்பதால், இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : District Secretaries ,AIADMK ,OPS ,EPS , AIADMK District Secretaries Meeting, EPS, OPS
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 10...