தஞ்சையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க நடவடிக்கை: மாநகராட்சி திடீரென நோட்டீஸ் ஒட்டியது குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: தஞ்சையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்க தஞ்சை மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு யார் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்பிஜி மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த வீடு பழுதடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கட்டிடத்தை ஆய்வு செய்தபின், யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் கட்டிடத்தை இடிக்க வேண்டுமென வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அந்த அறிவிப்பு நோட்டீசில் கூறப்பட்டு இருந்ததாவது:  தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட எஸ்பிஜி மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கும், பள்ளிக்கும் அருகிலும் வீடு உள்ளது.
எனவே அபாயகரமான கட்டிடத்தை எவ்விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தக்க முன்னேற்பாடுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்.

மேலும் தங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. எச்சரிக்கை நோட்டீஸ்: இந்த நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் எஸ்பிஜி மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீட்டுக்கு வந்தனர். அங்கு இருந்த மனோகரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். அவர்களும் பாதுகாப்பு கருதி விரைவில் வீட்டை இடிப்பதாக தகவல் தெரிவித்தனர். இப்போது வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

நாய்கள் மட்டும் தான் உள்ளன. நானும், எனது மனைவியும் வீட்டின் பின்பகுதியில் ஷெட் அமைத்து சமைத்து சாப்பிட்டு தங்கி கொண்டிருக்கிறோம் என்றார். இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டின் வாசலில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில் செப்டம்பர் மாதம் கொடுத்த எச்சரிக்கை நோட்டீசின் படி இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால் உள்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது. இப்படிக்கு தஞ்சை மாநகராட்சி ஆணையர் என கூறப்பட்டுள்ளது.
நோட்டீசை ஒட்டிய அதிகாரிகள், வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம், நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள். உங்களுக்கான 15 நாள் அவகாசம் முடிந்து விட்டது. மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்க உள்ளோம். எனவே உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறி விட்டு சென்றனர்.  சசிகலா வீட்டை இடிக்க அரசு இடிக்க முடிவு எடுத்திருப்பதன் பின்னணி பற்றி கூறப்படுவதாவது: சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா இப்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படும் நிலையில், சசிகலாவையோ அவரை சார்ந்தவர்களையோ அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று தலைமை கூறிவருகிறது. இது சசிகலா தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் தஞ்சை வீட்டை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களிலேயே பாழடைந்த கட்டிடங்கள், அங்கீகாரம் இல்லாத கட்டிடங்கள் பெருமளவில் இருக்கும்போது அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம் திடீெரன சசிகலா வீட்டை இடிக்க முடிவெடுத்திருப்பது அரசியல் பார்வையாளர்களிடம் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.  இந்த வீட்டை முதலில் இடிப்பது, அதனால் ஏற்படும் விளைவுகளை பார்த்துவிட்டு சசிகலா சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அழிப்பது என அதிமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.


Tags : home ,Sasikala ,Thanjavur , Tanjore, Sasikala House, Corporation, Notices
× RELATED விபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்