×

ஜெயலலிதாவின் 3வது ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்கள் அஞ்சலி

சென்னை: ஜெயலலிதாவின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், சபாநாயகர் தனபால், டி.டி.வி.தினகரன், தீபா உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
 ஜெயலலிதாவின் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் நேற்று காலை 11.15 மணிக்கு ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்களும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான அதிமுகவினர் சென்னை, வாலாஜா சாலையில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு ஊர்வலமாக வந்து ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, சமாதி அருகே அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் நின்றபடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தொண்டர்கள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ‘ஜெயலிலதா அமைத்து தந்த அரசினை வெற்றி பெறச் செய்வோம். உள்ளாட்சி தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா வழியில் அதிமுகவை வெற்றி சிகரத்தில் வீற்றிருக்க செய்வோம்’ என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர். இவர்களை தொடர்ந்து, அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அக்கட்சியினர் வந்தனர். சபாநாயகர் தனபால் தனது குடும்பத்தினருடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

போக்குவரத்து நெரிசல்: காமராஜர் சாலை, வாலாஜா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று பாதை வழியாக வாகனங்கள் இதனால் சென்னையின் மற்ற சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால் மாநகர பஸ், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றவர்கள் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.

Tags : Anniversary ,Chief Minister ,Volunteers Jayalalithaa ,Ministers ,Deputy Chief Minister ,Volunteers , Jayalalithaa, Chief Minister, Deputy Chief Minister, Ministers, Volunteers, Anjali
× RELATED அமைச்சர் பாஸ்கரன் குளறுபடி பேச்சு...