உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை பாஜவில் 15 பேர் தேர்தல் பணிக்குழு: தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிப்பால் சர்ச்சை

சென்னை: தமிழகத்தில் ஊராட்சிகளுக்கு வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜவில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 15 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் வெளியிட்டுள்ளார். தேர்தல் பணிக்குழுவுக்கு பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொது செயலாளர்கள் கே.எஸ்.நரேந்திரன், எஸ்.மோகன்ராஜூலு, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், துணை தலைவர்கள் சுப.நாகராஜன், நயினார் நாகேந்திரன், சிவகாமி பரமசிவம், மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.வேதரத்தினம், மகளிர் அணி தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி, எஸ்.சி. அணி தலைவர் எம்.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.ராமதாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertising
Advertising

தேர்தல் பணிக்குழுவில் பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜவில் தமிழிசை ஆதரவாளர்களாக கருதப்படும் மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், ஊடக துறை தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், பாஜ துணை தலைவர் எம்.என்.ராஜா, மாநில செயலாளர்கள் கரு.நாகராஜன், மதுரை சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் யாருக்கும் குழுவில் இடம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.  இதுதொடர்பாக தமிழிசை ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவராக இருந்த போது கட்சிக்காக இரவு, பகலாக உழைத்தோம். ஆனால், தற்போது புறக்கணிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: