×

7,677 கோடி செலவில் காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: முதல்வர் எடப்பாடி விரைவில் அறிவிக்கிறார்,..முதற்கட்டமாக 118 கி.மீ செயல்படுத்தப்படும்

சென்னை: காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை ரூ.7677 கோடி செலவில் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கான அறிவிப்பை விரைவில் முதல்வர் எடப்பாடி வெளியிடுகிறார்.  மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை திருப்பி விடும் வகையில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கடந்த 2012ல் அறிவித்தது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 2014ம் ஆண்டு கரூர் மாவட்டம் மாயனூர் கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு புதிய கதவணை கட்டி முடிக்கப்பட்டது. இத்திட்டத்தின் அடுத்தகட்டமாக காவிரி ஆற்றில் வெள்ள நீரை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்பி விடும் திட்டத்துக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின்படி 258 கி.மீ தூரம் கால்வாய் அமைக்க ரூ.5,166 கோடி தேவை என, மதிப்பிடப்பட்டது.  இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் வெள்ள மேலாண்ைம திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தின் நிதி தர மத்திய அரசு மறுத்து விட்டது. இந்நிலையில் கோதாவரி முதல் காவிரி வரை நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு தற்போது மத்திய அரசு தேசிய நீர் மேம்பாட்டு முகமை மூலம் விரிவான அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை அனுப்பி வைத்தது. இந்த அறிக்கைக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக ரூ.7677 கோடி செலவில் காவிரி மாயனூர் கட்டளை கதவணையில் இருந்து அக்னியாறு-தெற்கு வெள்ளாறு வரை நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 118 கி.மீ தூரம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதே நேரத்தில் அந்த பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த திட்டத்துக்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Government , Cauvery-South Coconut Connection Scheme, Federal Government Approval, CM Edappadi
× RELATED நகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி...