இணைப்பு பற்றி அதிமுகவில் இருந்து எந்த பதிலும் வரவில்லை ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர்: ஜெயலலிதா அண்ணன் மகள் புகார்

சென்னை:  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ெஜ.தீபா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  அதிமுகவில் இணைவதற்காக எங்கள் இயக்கத்தின் சார்பாக முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சி பலனளிக்கவில்லை. நீண்ட காலமாக அதிமுகவுடன் தொடர் போராட்டத்தை நடத்தி, அவர்களுடன் இணைத்து கொள்கிறோம் என்று சொன்ன பிறகும் கூட எந்த பதிலும் இதுவரை வரவில்லை. அதிமுக அரசு மந்தமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  பிரபலமான ஒருவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்போது அவர்களை சார்ந்தவர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ முறையாக அணுகி அந்த கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பதை பற்றி பேசி அதன்பின் படம் எடுப்பதுதான் மரபு.

அதையும் மீறி, ஜெயலலிதாவின் உறவினர்கள் நாங்கள் இருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தும் எங்களை அணுகவில்லை. முறையாக எதுவும் செய்யாமல், ஒரு கமர்சியல் படமாக எடுக்க முயன்றதால் அதற்கு தடை விதிக்க சொல்லியிருக்கிறேன்.

 அதிமுகவுடன் இணைப்பு என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த இணைப்பு நடக்கவில்லை. எங்கள் அமைப்பில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். மற்றவர்களை இணைத்துக் கொள்ளவில்லை.   நான் கட்சி தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திருப்பும் வகையில் எங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும், பின்னர் பின் வாங்குவதுமாக இருக்கின்றனர். தேர்தல் வந்தால் மட்டும் இணைத்துக் கொள்வதாக கூறுகின்றனர். தேர்தல் நேரத்தில் நாங்கள் தனித்து போட்டியிடக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்படி செய்வதாக கருதுகிறேன்.

 ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். மீண்டும் அதிமுகவுடன் இணைப்பு என்ற முயற்சி இனி என்னால் எடுக்கப்படாது. அடுத்தகட்ட நிலைப்பாட்டை எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

 இவ்வாறு அவர் கூறினார்.   

Related Stories: