வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரை இயக்க 3 மெட்ரோ ரயில்கள் சென்னை வருகை

சென்னை: வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் இயக்குவதற்காக 3 புதிய மெட்ரோ ரயில்கள் நேற்று சென்னை வந்தடைந்தன. சென்னையில் மெட்ரோ ரயில் முதல் திட்டம் 45.1 கி.மீ தூரத்திற்கு செயல்பட்டு வருகிறது. விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை வரையில் செயல்பட்டு வரும் இத்திட்டத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நீட்டிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 9.1 கி.மீ தூரம் வரையிலான இந்த நீட்டிப்பு பணிக்கு ரூ3,770 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது.

மேலும், இந்த நீட்டிப்பு வழித்தடத்தில் இயக்குவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூடுதலாக 10 ரயில்களை ஆர்டர் செய்தது. இதற்காக, பெங்களூர் ஸ்ரீசிட்டில் உள்ள ஆல்ஸ்டாம் ரயில்பெட்டி தயாரிப்பு நிறுவனம் மெட்ரோ ரயில்பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, 10 ரயில்களில் முதல் 3 ரயில்கள் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டன. கோயம்பேடு பணிமனையில் இவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் முழு தர பரிசோதனைக்கு பிறகே கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ந்து மெட்ரோ ரயில் வழித்தடத்தில் குறைவான மற்றும் அதிவேகத்தில் புதிய ரயில்கள் இயக்கி பார்க்கப்பட்ட பிறகே நீட்டிப்பு வழிதடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட உள்ளது. 2020 பிப்ரவரி மாதத்திற்குள் மீதம் உள்ள 7 மெட்ரோ ரயில்கள் முழுமையாக சென்னை கொண்டுவரப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: