அ.ம.மு.க கட்சி பதிவுக்கு தடைகோரிய வழக்கு தேர்தல் ஆணையம் தினகரன் பதில் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அ.ம.மு.க கட்சி பதிவுக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன் ஆகியோர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:   டிடிவி.தினகரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறி பொதுக்குழுவைக் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல், தனக்குத்தானே பொதுச்செயலாளர் என பிரகடனம் செய்து கொண்டார். தனது விருப்பப்படி நிர்வாகிகளை நியமித்துள்ளார்.   ஒரு கட்சியை பதிவு செய்ய 100 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த 100 பேரில் பிரமாணப் பத்திரம் அளித்த நான் உள்ளிட்ட 15 பேர் தற்போது கட்சியில் இல்லை என்பதால், இதுதொடர்பாக டிடிவி.தினகரன் அளித்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன்.

ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பதிலும் இல்லை. எனவே, அமமுகவை பதிவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை பதிவு ெசய்ய தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.   இந்த மனு   நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன் ஆகியோர்  பதில் தர உத்தரவிட்டு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளிவைத்தார்.   விசாரணையின்போது, கட்சிக்குள் நடக்கும் விஷயத்தை ஏன் நீதிமன்றத்திற்கு  கொண்டு வருகிறீர்கள். உங்கள் பிரமாண பத்திரத்தை வேண்டுமானால் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். முடிவு செய்வது தேர்தல் ஆணையம் கையில் இருக்கிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Stories: