கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழம் பழுக்க வைத்தால் லைசென்ஸ் ரத்து: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை:சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை மற்றும் அனைத்துவகை பழங்களை இயற்கை முறையில் பழுக்க வைக்கும் முறைகள் குறித்து பழ வியாபாரிகள் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முகாமில் ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘இயற்கை முறையில் மட்டுமே வாழை பழங்களை பழுக்கவைக்க வேண்டும். புகைமூட்டம் போட்டு பழுக்க வைக்கலாம். எத்திலீன் வாயுவை பயன்படுத்தி பழுக்க வைக்கும்போது, அதன் அளவு 100 பி.பி.எம்முக்கு மிகாமல் இருக்க வேண்டும். கார்பைடு கற்கள் அல்லது அதன் மூலம் உருவாகும் அசிட்டிலின் வாயுவை கொண்டு வாழை மற்றும் மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது.

பழங்களின் மீது எத்தோஃபார்ம் கலந்த திரவத்தை நேரடியாக தெளித்து பழுக்க வைக்கக்கூடாது. இந்த உணவு பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது 2006 பிரிவு 50, 55, 57, 59 மற்றும் 63ன்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை மற்றும் மாம்பழங்களை இயற்கை முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்தால், அந்த வியாபாரிகளின் கடை உரிமம், உணவு பாதுகாப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படும். ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: