போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: நீதிபதி வினீத் கோத்தாரி திறந்து வைத்தார்

சென்னை: சென்னையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை ஐகோர்ட் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி திறந்து வைத்தார். நாளுக்கு நாள் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்படும் வழக்குகள் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் மகளிர் நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் விசாரிக்கப்படுவதாலும் போக்சோ வழக்குகள் அதிகமாக இருப்பதாலும் வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இதனால், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தனியாகவும், மகளிருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனியாகவும் நீதிமன்றம் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இயங்கி வந்த மகளிர் நீதிமன்றத்தை எழும்பூருக்கு மாற்றி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மகளிர் நீதிமன்றத்தை போக்சோ நீதிமன்றமாக மாற்றியுள்ளனர். இந்த நீதிமன்றத்தை, ஐகோர்ட் மூத்த நீதிபதி வினீத் கோத்தரி குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர், நடந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்களிடம் நீதிபதி வினீத் கோத்தரி பேசுகையில், வழக்குகளில் விரைந்து தீர்வு காண, இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் நிலுவையில் உள்ள 200க்கும் மேற்பட்ட வழக்குகளை கால வரம்பு நிர்ணயித்து முடிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் 16 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் திறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: