மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜ துணை தலைவர் திமுகவில் இணைந்தார்

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் நேற்று திமுகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழா கடந்த 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு பேசுகையில், “ எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம்” என்றார். அவரின் பேச்சு பாஜகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் பாஜகவின் நிகழ்ச்சி, கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பி.டி.அரசகுமார் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அப்போது விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ., தீர்மானக்குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், பெரியண்ணன். அரசு எம்.எல்.ஏ., புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ். சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த பின்னர் பி.டி.அரசகுமார் அளித்த பேட்டி: புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் உண்மையை, எதார்த்தத்தை, நடைமுறையை நான் வெளிப்படுத்தினேன். இதற்காக கடந்த 2, 3 நாட்களாக என் வாழ்நாளில் இதுவரை காது கொடுத்து கேட்கமுடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் கேட்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். இதை எண்ணி மனம் சோர்ந்திருந்தேன்.

அந்த நேரத்தில் மு.க.ஸ்டாலினின் அன்பின் அடிப்படையிலும், முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக முன்னோடிகள் அனைவரும், இதற்கு மேலும் நீங்கள் பொறுத்திருக்க வேண்டாம். நீங்கள் இணைய வேண்டிய இடத்தில் இணையவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, என்று அழைத்ததின் அடிப்படையில் மனநிறைவோடு திமுகவில் இணைந்துள்ளேன். இன்னும் ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி தமிழகம் செல்ல இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி தமிழகத்தில் அமைவதற்கு இன்று முதல் எனது பயணம் தொடரும். தமிழக பாஜகவில் உள்ள சில புல்லுருவிகள், என்னை வெளியேற்ற வேண்டும் என்று எண்ணினார்கள்.

நான் இருந்தால் தங்களது வளர்ச்சிக்கு ஆபத்து என்று நினைத்தார்கள். அவர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நிரந்தரமற்றது. நான் பதவிக்கு ஆசைப்பட்டு திமுகவிற்கு வரவில்லை. 2006ம் ஆண்டு மருங்காபுரி சட்டசபை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றேன். 2014ம் ஆண்டு தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவராக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டேன். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டேன். எனது சொந்த ஊரில் 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்திருக்கிறேன். பல்வேறு அமைப்புகளுக்கும் நான் தலைவராக இருக்கிறேன். திமுகவின் தொண்டனாக மு.க.ஸ்டாலின் என்னை ஏற்றுக்கொண்டதற்காக நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: