ஆந்திராவில் சலுகை விலை விற்பனை வெங்காயம் வாங்க கடும் தள்ளுமுள்ளு: பெண்கள், முதியோர் காயம்

திருமலை: ஆந்திராவில் அரசு சார்பில் வழங்கக்கூடிய சலுகை விலை வெங்காயம் வாங்க வந்த பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். நாடு முழுவதும் வெங்காயம் உற்பத்தி செய்யக்கூடிய மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் விளைவிக்கப்பட்ட வெங்காயம் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்நிலையில் ஒரு கிலோ வெங்காயம் 120 முதல் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு பொதுமக்களின் நலன் கருதி விவசாயிகளிடமிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயத்தை  நேரடியாக கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் உள்ள உழவர் சந்தை மூலம் ஒரு கிலோ 25 வீதம் ஒரு நபருக்கு ஒரு கிலோ விற்கப்படுகிறது. இந்த வெங்காயத்தை பெறுவதற்காக மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளின் முன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள உழவர் சந்தையில் நேற்று வெங்காயம் வாங்க ஆயிரக்கணக்காக பொதுமக்கள் திரண்டனர். உழவர் சந்தை கேட் திறப்பதற்குள் வெங்காயத்தை பெறுவதற்காக பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஒரே நேரத்தில் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள், முதியவர்கள் என பலருக்கு சிறுகாயம் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ்  பொதுமக்களை வரிசையாக நிற்கவைத்து உழவர் சந்தைக்குள் சென்று வெங்காயம் வாங்க அனுமதித்தனர். 

Related Stories:

>