வெங்காயம் சாப்பிடுவது பற்றி சர்ச்சை கருத்து நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்: நிதியமைச்சகம் வீடியோ வெளியிட்டு விளக்கம்

புதுடெல்லி: ‘‘நான் அதிகம் வெங்காயம் சாப்பிட மாட்டேன். அப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் வெங்காயத்தை பற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படுவது இல்லை,’’ என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.மக்களவையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, வெங்காய விலை உயர்வு குறித்தும், தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்டார். அப்போது பதிலளித்த நிர்மலா சீதாராமன், ‘‘நான் அதிகம் வெங்காயம் சாப்பிட மாட்டேன். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதால், வெங்காயத்தை பற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படுவது இல்லை,’’ என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் நிதியமைச்சரை கடுமையாக விமர்சித்தனர். சாமானிய மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல், நிர்மலா பேசுவதாக அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், இது தொடர்பாக நிர்மலா சீதாராமனின் அலுவலக டிவிட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நிதி அமைச்சரின் சம்பந்தப்பட்ட பேச்சு மட்டும் வெட்டி வெளியிடப்பட்டு உள்ளதாகவும், முழுமையான வீடியோவில் அவர் எம்பி.யின் கேள்விக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு முழுமையான வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.எம்பி சுப்ரியா சுலே கேள்வி கேட்டு முடித்ததும், நிர்மலா சீதாராமன் பதிலளிக்க எழுந்துள்ளார். அப்போது எம்பி ஒருவர் குறுக்கிட்டு, ‘‘நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?’’ என கேள்வி கேட்டுள்ளார். இதனால் சற்று ஆத்திரமடைந்த நிதி அமைச்சர், அவ்வாறு பேசியிருக்கிறார். அதன்பின் அவர் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை போக்கவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாகவும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பட்டர் புரூட் சாப்பிடுகிறாரா?

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் எம்பிக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அவர், ‘‘வெங்காயம் சாப்பிடுவதில்லை என்பதால் அதைப் பற்றி கவலையில்லை என நிதியமைச்சர் கூறியிருக்கிறார். வெங்காயம் சாப்பிடவில்லை என்றால், அவர் என்ன பட்டர் புரூட்டா சாப்பிடுகிறார்?’’ என்றார். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ‘‘நிதி அமைச்சரை நான் கிண்டல் செய்யவில்லை. அவரிடம் கேள்வி கேட்கிறேன். விலையை கட்டுப்படுத்த முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார். பிறகு ஏன் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும்? அதெல்லாம் எப்போது வந்து சேரும். நிதி அமைச்சரின் பேச்சு, இந்த அரசின் மனநிலையை காட்டுகிறது,’’ என்றார்.

நானும் கூட சுத்த ‘நான் வெங்காயம்’

வெங்காயம் குறித்த விவாதத்தின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை,’ என்று தெரிவித்தார். அதேபோல் இன்னொரு மத்திய அமைச்சரும், தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வனி சவுபே தான் இப்படி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் ஒரு சுத்த சைவம். இதுவரை வெங்காயமே சாப்பிட்டது இல்லை. எனவே, எனக்கு வெங்காயம் விலை சந்தையில் எப்படி விற்கப்படுகிறது என்பது தெரியாது,” என்றார்.

Related Stories: