பொருளாதார மந்தநிலை பற்றி பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்; அரசோ தீர்வு தெரியாமல் தவிக்கிறது: ஜாமீனில் வெளியே வந்த ப.சிதம்பரம் விளாசல்

புதுடெல்லி: ஜாமீனில் வெளியே வந்த பின் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், ‘‘பொருளாதார மந்தநிலை பற்றி பிரதமர் மோடியோ வாய் திறக்காமல் மவுனம் காக்கிறார். மத்திய அரசோ தீர்வுக்கு வழி தெரியாமல் தவிக்கிறது,’’ என விமர்சித்தார்.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு 106 நாள் சிறைவாசத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. அவர் வெளியே வந்ததுமே, மத்திய அரசு மீதான தாக்குதலை தொடங்கி இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, டெல்லியில் நேற்று அவர் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:சிறையிலிருந்து வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசித்ததும், முதலில் காஷ்மீர் மக்களைப் பற்றி தான் நினைத்துப் பார்த்தேன். காஷ்மீரில் வாழும் 75 லட்சம் மக்களுக்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசு அனுமதி அளித்தால், காஷ்மீர் செல்ல தயாராக இருக்கிறேன்.தற்போது நாட்டில் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. நடப்பு நிதியாண்டில் 7 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள் சுழற்சியானவை என்றே அரசு நம்பிக் கொண்டிருக்கிறது. இது தவறு. ஏனெனில், பொருளாதார மந்தநிலையை தீர்க்க வழி தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. தவறான ஜிஎஸ்டி, வரி தீவிரமாக்கல், ஒழுங்குமுறை அழிப்பு, பிரதமர் அலுவலகத்திற்கே ஒட்டுமொத்த அதிகார குவிப்பு போன்ற பேரழிவு தவறுகளால் எந்த தீர்வையும் அவர்களால் எட்ட முடியவில்லை.

பிரதமர் மோடியோ வழக்கத்திற்கு மாறாக அவரது சகாக்களை குரலை உயர்த்தி பேச விட்டு, அவர் மட்டும் வாய் திறக்காமல் மவுனமாகவே இருக்கிறார். கடந்த 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ, கடந்த 2016ம் ஆண்டு முதல் பல லட்சம் மக்களை மீண்டும் வறுமையில் தள்ளி உள்ளது. பொருளாதாரத்தை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும். ஆனால், இந்த அரசுக்கு அதற்கான திறமை இல்லை. பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் மற்றும் பிற சில கட்சிகள் போதிய தகுதியை கொண்டுள்ளன. அதற்கான சரியான காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

‘இந்த அரசால் எனதுகுரலை ஒடுக்க முடியாது’

பேட்டியில் ப.சிதம்பரம் மேலும் கூறுகையில், ‘‘இந்த அரசை விமர்சிக்க அனைத்து துறையினர் மத்தியிலும் அச்சம் நிலவுகிறது. மீடியாக்கள் கூட பயப்படுகின்றன. சோனியா குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என அரசு கருதினால், அவர்களின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். நான் மீண்டும் திரும்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குரலை இந்த அரசால் ஒடுக்க முடியாது,’’ என்றார்.ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பாக கேட்டதற்கு பதிலளிக்க மறுத்த ப.சிதம்பரம், ‘‘நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பல அடுக்கு அசுத்தங்கள் துடைக்கப்பட்டு உள்ளன’’ என்று மட்டும் கூறினார்.

ஜாமீன் நிபந்தனையை மீறிவிட்டார்

ப.சிதம்பரத்தை சொந்த ஜாமீனில் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. வழக்கு தொடர்பாக அவர் எதுவும் பேசக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் வழக்கு தொடர்பாக பேசி, நீதிமன்ற நிபந்தனையை மீறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories:

>