நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை விவகாரம் வக்கீல் சங்கத்தினரிடம் வருத்தம் தெரிவித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி

புதுடெல்லி: வக்கீலுக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எச்சரிக்கை விடுத்த விவகாரத்தில், வக்கீல் சங்கத்தினரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வருத்தம் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு ஒன்றை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இதன் விசாரணை கடந்த செவ்வாய்கிழமை நடந்தபோது, இந்த வழக்கில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் தனது தரப்பு வாதங்களை, அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும் மீறி தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, ‘இவ்வாறு தொடர்ந்து வாதிட்டால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரித்தார். இதனால் கோபம் அடைந்த வக்கீல் கோபால் சங்கர நாராயணன், தொடர்ந்து வாதாடாமல் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி விட்டார். மேலும், இது பற்றி உச்ச நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்திலும் அவர் முறையிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற வக்கீல் சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘இது போன்ற அவமதிப்பு புகார்களை வக்கீல்கள் தொடர்ந்து எழுப்பி கொண்டிருக்கின்றனர். நீதிமன்றத்தின் கவுரவத்தையும், ஒழுங்கையும் காக்க வேண்டிய கடமை வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் உள்ளது. வக்கீல்களுடன் பேசும் போது நீதிபதி அருண் மிஸ்ரா சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும்,’ என கூறப்பட்டது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், மூத்த வக்கீல்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி,் அபிஷேக் சிங்வி மற்றும் உச்ச நீதிமன்ற வக்கீல் சங்கத் தலைவர் ராகேஷ் கண்ணா ஆகியோர் நேற்று எழுப்பினர். அப்போது, நீதிபதி அருண் மிஸ்ராவிடம் கபில் சிபல் கூறுகையில், ‘‘நீதிமன்றத்தின் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை வக்கீல்கள்,  நீதிபதிகள் ஆகிய இருவருக்குமே உள்ளது. இங்கு பரஸ்பர மரியாதை தொடர வேண்டும்,’’ என்றார்.

அதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், ‘‘நீதிபதிகள் அமர்வின் தாயே, வக்கீல் சங்கம்தான். அதை மற்ற நீதிபதிகளை விட நான் அதிகம் மதிக்கிறேன். என் மீது எந்த தவறான எண்ணமும் வேண்டாம். என்னால் யாராவது எப்போதாவது புண்பட்டிருந்தால், அதற்காக கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீதிபதியாக எனது 20 ஆண்டு அனுபவத்தில், எந்த வக்கீல் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததில்லை. ஆணவம், இந்த உயர்ந்த உச்ச நீதிமன்றத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. நான் அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும், எப்போதும் வக்கீல் சங்கத்துக்கு ஆதரவாக உள்ளேன் என்று கூறினார்.

Related Stories: