சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் 2018ம் ஆண்டு தீர்ப்பு இறுதியானது அல்ல: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல,’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை கடந்த மாதம் 14ம் தேதி விசாரித்து தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த மனுக்கள் அனைத்தையும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்தது.

இந்நிலையில், சபரிமலை மண்டல பூஜை சமீபத்தில் தொடங்கியது. சில நாட்களுக்கு முன் பெண் சமூக ஆர்வலரான பிந்து அம்மிணி சபரிமலைக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட சபரிமலை வழக்கு தீர்ப்பு மீறப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, `சபரிமலை வழக்கில் கடந்தாண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல. இந்த வழக்கில் அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. எனவே, இது இறுதி தீர்ப்பு அல்ல. பிந்துவின் மனு முந்தைய மனுக்களுடன் சேர்த்து அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்,’ என்று உத்தரவிட்டது.

செல்போன் பயன்படுத்த தடை

சபரிமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என போலீசுக்கு புகார்கள் வந்தன.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் சபரிமலை கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறினர். கோயிலுக்கு செல்போனை ஆப் செய்து கொண்டு செல்லலாம். கோயில் வளாகத்தில் பேசவோ, போட்டோ எடுக்கவோ கூடாது என தேவசம்ேபார்டு தலைவர் வாசு கூறினார்.

Related Stories: