தமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்

டெல்லி: மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி பேசும்போது, ‘’காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை  ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்குத் திட்டம் வகுத்து இருக்கின்றது. மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது.  கிணறுகளைத் தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? அவ்வாறு தோண்டுகின்ற இடம், விளை நிலங்களாக இருந்தால்,  அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன.

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம்  கைவிடப்படுமா?’ என்றார். இதற்கு பதில் அளித்து  பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37  இடங்களில் ஹைட்ரோ  கார்பன் கிணறுகளை தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின்  ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

15 கிணறுகள், விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும் சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும் அப்பகுதி மக்களும், பல  அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்படும். சட்டங்கள்,  விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: