×

ஆழ்கடலில் கப்பல்கள் உதவியுடன் மீட்பு: மேலும் 250 மீனவர்கள் சிக்கினார்களா?....264 பேர் கோவா கொண்டு செல்லப்படுகின்றனர்

நாகர்கோவில்: மங்களூர் அருகே ஆழ்கடலில் சரக்கு கப்பல்களில் மீட்கப்பட்ட 264க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோவா கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அரபிக்கடல் பகுதியில் இரண்டு காற்றழுத்த தாழ்வுநிலைகள் மற்றும் புயல் சின்னம் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து லட்சத்தீவு, மங்களூர் பகுதியில் இருந்து கரை திரும்பிக்கொண்டிருந்த சுமார் 50 விசைப்படகுகளில் 650 மீனவர்கள் காற்றின் பிடியில் சிக்கினர். இதில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒரே பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளநிலையில் அவற்றில் 22 படகுகளில் இருந்த 200 மீனவர்கள் ஆறு கப்பல்களில் தஞ்சமடைந்தனர். சோபனா, டியுனே, பிரான்சிஸ், ஜெரோமியா, ஐஎம்எஸ், ரோசம்ஸ்டிகா, அற்புதமாதா ஆகிய ஏழு விசைப்படகுகளில் இருந்த 86 மீனவர்கள் ‘நவ்தேனு பூர்ணா’ என்ற இந்திய கப்பலில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் மேரி இமாகுலேட், பெரியநாயகி, கிறிஸ்ட் பகவான் ஆகிய விசைப்படகுகளில் இருந்த 33 பேர் ‘டோவடா’ என்ற ஜப்பான் கப்பலில் ஏறியுள்ளனர்.

அன்புமாதா என்ற படகில் இருந்த 14 பேர் ‘நியூ பாரடைஸ்’ என்ற கப்பலிலும், பிளசிங்ஸ், டோன் டி மரியா படகுகளில் இருந்த மொத்தம் 29 மீனவர்கள் ‘ஜாய் டைகர்’ என்ற கப்பலிலும் ஏறியுள்ளனர். அத்துடன் ஆஸ்ரேல் என்ற படகில் இருந்த 7 பேர் ‘நியூ பாரடைஸ்’ கப்பலிலும், இச்தஸ் அன்பு என்ற படகில் இருந்த 13 பேர் ‘நியூ என்டர்பிரைஸ்’ என்ற கப்பலிலும், டிவைன்மெர்சி என்ற படகில் இருந்த 18 பேர் ‘டைகர் ஜாய்’ என்ற கப்பலிலும் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், கேரளாவை சேர்ந்த மீனவர்களும் இதில் உண்டு. அதே வேளையில் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பலில் உள்ளவர்களை மீட்டு கரை சேர்க்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றனி தெரிவித்தார்.

இன்று காலை நிலவரப்படி மூன்று விசைப்படகுகளில் இருந்த மொத்தம் 36 பேர் கப்பல்களில் தஞ்சமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு கோவா சென்று சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மீனவர்களையும் மீட்டு அழைத்தவர மங்களூர், கொச்சி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலோர காவல்படையின் கப்பல்கள் சென்றுள்ளன. இதற்காக மீனவர்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்திவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கப்பல்கள் உதவியுடன் மொத்தம் 264 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 250க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் விசைப்படகுகளுடன் உள்ளதாகவும், அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டியிருப்பதாகவும், அவர்கள் அமைதியான கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கவோ அருகே உள்ள துறைமுக பகுதியில் பாதுகாப்பாக கரை சேர்ந்திருக்கவோ செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : fishermen ,Goa , Ships, Rescue, Fishermen, Goa
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...