×

கோலாகலமாக தொடங்கியது கிறிஸ்துமஸ் விழா: குமரியில் களைகட்டுகிறது ‘கேரல் ரவுண்ட்ஸ்’

அருமனை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இருப்பினும் பல்வேறு நிகழ்வுகளுடன் இந்த பண்டிகை டிசம்பர் 1ம் தேதியே தொடங்கி விடுகின்றன. குமரி மாவட்டத்தில் தற்போது கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. அதன்படி கிறிஸ்த ஆலயங்கள், வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான குடில்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின் விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதேபோல் முக்கிய இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ ேபராயத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 523 ஆலயங்கள் உள்ளன. இது 41 சேகரமாக பிரிக்கப்பட்டு உள்ளது. தற்போது 523 ஆலங்களின் சார்பிலும் கிறிஸ்து பிறப்பு பண்டிகையின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற கேரல் ரவுண்ட்ஸ் நடந்து வருகின்றன. தினசரி மாலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட  ஆலங்களில் இருந்து அந்தந்த போதகர்கள் தலைமையில் பாடல் குழுவினர் கூடுகின்றனர்.

பின்னர் தங்களது சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி, அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனந்தன் நகர் நல்லமேய்ப்பன் சிஎஸ்ஐ ஆலயம் சார்பில், கடந்த 4 நாட்களாக கேரல் ரவுண்ட்ஸ் நடந்து வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கி பல்வேறு இடங்களில் இந்த பவனி நடந்தது. இதேபோல் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டி உள்ளது. குறிப்பாக அருமனை பகுதியில் கடந்த 1ம் தேதியே கேரல் ரவுண்ட் தொடங்கி விட்டது. இதே போல் கிறிஸ்தவ கல்லூரிகள் சார்பிலும் கேரல் ரவுண்ட்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெந்தே கோஸ்தே சபை, கிறிஸ்தவ ஊழியங்கள் சார்பிலும் கேரல் ரவுண்ட் நடந்து வருகிறது.

கேக் ஆர்டர்கள் ஜரூர்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கு பெறுகின்றவர்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி கேக்குகள் வழங்கப்படுகின்றன. இதற்காக இப்போதே பேக்கரிகளில் ஆர்டர் கொடுக்கப்பட்டு வருகிறது. குமரியில் முக்கிய பேக்கரிகள் மற்றும் கேக் சென்டர்களில் இந்த வருடம் ஸ்பெஷல் கேக்குகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது கேக் விலைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் ஆர்டர்கள் குறையவில்லை. கடந்த வருடங்களை போல் ஆர்டர்கள் வருகிறது. தற்போது சர்ச்சுகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் விதவிதமான கேக்குகள் கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர் என்கின்றனர் பேக்கரி உரிமையாளர்கள்.

Tags : Kumari ,Christmas , Christmas Ceremony, Kumari, Carol Rounds
× RELATED குமரியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹100