சிவகாசி நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பசுமை உர குடில்கள் முடக்கம்: ரூ.6 கோடி வீணடிப்பு

சிவகாசி: சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியுள்ளது. சிவகாசி நகராட்சியில் மக்கும் தன்மை உடைய குப்பைகளை உரமாக தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.6.19 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியில் நகராட்சி பகுதியில் உள்ள துப்பரவு பணியாளர் குடியிருப்பு, விஸ்வநத்தம் நகராட்சி மார்க்கெட், பிகேஎஸ்ஏ ஆறுமுகம் ரோடு, விளாம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு, வேலாயுத ரஸ்தா  ஆகிய இடங்களில் ரூ.45 லட்சம் மதிப்பில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. சிவகாசி நகராட்சியில் தினமும் 3 டன் குப்பை கழிவுகள் வரை சேருகின்றன. இதில் மக்கும் தன்மை உள்ள குப்பை கழிவுகளை தனியாக பிாித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தாயாரிக்கப்படுகிறது. சிவகாசியில் 6 இடங்களில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் பசுமை உரக்குடிலில் தயாரிக்கப்படும் உரத்திற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.  

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ.6.19 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்போது 4 உர குடில்கள் மட்டுமே பெயரளவுக்கு செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் ரோடு, வேலாயுத ரஸ்தா பகுதியில் கட்டப்பட்டுள்ள உரகுடில்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் இதனை செயல்படுத்த முனைப்பு காட்டாததால் உரகுடில்கள் பூட்டியே கிடக்கின்றன. சிவகாசி நகராட்சி பகுதியில் தனியார் குப்பை சேகரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் குப்பை சேகரிப்பு பணிகளில் தனியார் நிறுவனத்தினர் முறையாக ஈடுபடாததால் நகரில் எங்கு பார்த்தாலும் குப்பையாக காட்சி அளிக்கிறது. இதனால் நகர் பகுதியில் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.  குப்பை சேகரிப்பு பணிகள் முறையாக நடக்காததால் பசுமை உரகுடில்கள் அனைத்தும் பெயரளவில் செயல்படுகின்றன. இதனால் மத்திய அரசின் நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: