பேருந்து முன்பாக ஓடி வந்த காட்டு யானை பள்ளி மாணவ, மாணவிகள் அலறல்: வால்பாறை அருகே பரபரப்பு

வால்பாறை: வால்பாறை அருகேயுள்ள பெரிய கள்ளார் எஸ்டேட்டில் இருந்து வால்பாறைக்கு இன்று காலை வந்த அரசு பேருந்து முன்பு ஓடி வந்த காட்டு யானையால் பேருந்திலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள பெரியகள்ளர் எஸ்டேட்டில் இருந்து இன்று காலை ஏழு முப்பது மணியளவில் வால்பாறை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர். பேருந்து அங்குள்ள வனப்பகுதி வழியாக வரும் பொழுது எதிரே காட்டு யானை கூட்டம் வந்தது. பேருந்தை கண்ட யானைகள் விலகி சென்றன.

அதிலிருந்த ஒரு யானை மட்டும் பேருந்தை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதனால் பீதியடைந்த மாணவ, மாணவிகள் அலறினர். சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் ஒலி பெருக்கியை தொடர்ந்து இயக்கினார். அதன் சப்தம் கேட்ட யானை ஸ்தம்பித்து சாலையில் இருந்து விலகி சென்றது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். பின்னர் பேருந்து வால்பாறைக்கு பத்திரமாக வந்து சேர்ந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்றனர். பேருந்தை காட்டு யானை வழி மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: