9 மாவட்டங்களில் ரத்தா? அனைத்து மாவட்டங்களில் ரத்தா?: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம்  அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம், சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும்  முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி  தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி அறிவித்தார். வேட்புமனு தாக்கல் வருகிற 6ம் தேதி தொடங்கும்.  வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் வருகிற 13ம் தேதி ஆகும். 16ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.

18ம் தேதி வரை வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். வாக்குப்பதிவு 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி  நடைபெறும். அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  உட்பட்ட பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு நடத்தை  விதிமுறைகள் பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

தொகுதி மறுவரையறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, உள்ளாட்சி தேர்தலுக்கு தடைக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றம் விசாரணை:

இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒன்றாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது,

திமுக தரப்பு வழக்கறிஞர்;

*உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

* மாவட்ட தேர்தல் அதிகாரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார் என  திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்  சிங்வி வாதம் செய்தார்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராயிருந்த வழக்கறிஞர்;

* 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

* புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை.

* வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது.

* அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும் என வாதம்  செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி;  

* புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடிக்காவிடில் குழப்பம் ஏற்படாதா?

* மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் மறுவரையறை செய்ய வேண்டாமா?

* பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பழைய நிலையே தொடரும் என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது?

* இத்தனை ஆண்டுகளாக ஏன் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை?

* உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நாம் நடக்க வேண்டும் *மாவட்டங்கள் பிரிக்கும் போது வார்டு  மறுவரையறை அவசியம்

* உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதாக இருந்தால் கூட பரவாயில்லை; ஆனால் சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்

* மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் தேர்தல் நடைமுறையை அரசு தாமதப்படுத்துவதாக தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழக அரசு;

* புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம்.

* வேலூர், காஞ்சி, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம்.

* தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தரப்பு;

* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும்

* 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தால் குழப்பம் ஏற்படும் என திமுக வழக்கறிஞர் வாதம் செய்தார்.

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு:

* 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என தேர்தல் ஆணையம் 2 மணிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நாளை தீர்ப்பு:

இந்நிலையில், தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  உச்சநீதிமன்றம் நாளை வழங்கவுள்ள தீர்ப்பு மூலம், 9 மாவட்டங்களில் தேர்தல் ரத்தா? அனைத்து மாவட்டங்களில் ரத்தா? என்ற கேள்விக்கு நாளை  விடை தெரியும்.

Related Stories: