×

சபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து

டெல்லி: சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்கு செல்ல காலம் காலமாகத் தடை  இருந்து வருகிறது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி  தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018, செப்டம்பர் 28-ம் தேதி அதிரடி தீர்ப்பளித்தது. இதனால், தமிழகம், கேரள என பல்வேறு  மாநிலங்களில் இந்து அமைப்பினர், ஐயப்ப பக்கதர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையே, சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர்  கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடைவிதிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இந்நிலையில்  இந்தத் தீர்ப்பையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலை செல்வதற்காக திருப்தி தேசாய் கொச்சி வந்தபோது அவரை சந்திக்க சென்ற பிந்து  அம்மிணி மீது ஒருவர் மிளகு ஸ்பிரேயை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பிந்து  அம்மிணி என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது பிந்து அம்மிணி கூறுகையில், இளம் பெண்களை சபரிமலை செல்ல அனுமதிக்க மறுக்கும் போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார். தொடர்ந்து, கடந்த வாரம் சபரிமலை செல்ல முயன்ற போது தாம்  தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தும், சபரிமலை செல்லும் பெற்றோருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை விடுத்தும், சபரிமலை செல்வதற்கு  பாதுகாப்பு தருமாறு சமூக செயற்பாட்டாளர் பிந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்தே, தற்போது 6 நீதிபதிகள் கொண்ட அரசியல்  சாசன அமர்விற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு இவ்வழக்கில் இறுதியானது அல்ல.  இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சபரிமலை வழக்கில் எந்த மாதிரி தீர்ப்பு வருமோ என அனைவரும் எதிர்பார்த்துள்ள  நிலையில், தலைமை நீதிபதியின் இந்த கருத்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Sabarimala ,Supreme Court , Supreme Court rejects verdict on Sabarimala case
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு