திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி  மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள் வருகின்ற 9ம் தேதியிலிருந்து 12 தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, பெங்களூரு, தருமபுரி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஏனெனில் இப்பகுதிகளில் இருந்து அதிகளவிலான மக்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிகளவிலான மக்கள் வரக்கூடும் என்பதினால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை தவிர்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: