×

ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பீர்களா?...தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பீர்களா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை 4 வழிச்சாலையில் புதிதாக செயல்படும் 3 சுங்கச்சாவடிகளுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகம் சார்பில் மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கடந்த 22ம் தேதி முதல் செயல்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் இருந்து விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி, கப்பலூர் என 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகர் பகுதியில் போக்குவரத்தை குறைக்கவும், வாகனங்கள் விரைவாக செல்லவும் வசதியாகத்தான் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 4 வழிச்சாலைகளில் அடுத்தடுத்து சுங்கச்சாவடி அமைப்பதால், ஒவ்வொன்றிலும் நின்று செல்லும் வாகனங்கள், விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 4 வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் தான் சுங்கச்சாவடி மையம் அமைக்க வேண்டும். மேலும் அதில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 65 பைசா தான் வசூலிக்க வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து விமானநிலையம் அருகில் உள்ள பரம்புப்பட்டி வரை 27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்கச்சாவடிகளில் இந்த வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது. எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் 3 சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

3 சுங்க கட்டண மையங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும், என கூறியிருந்தார். இதேபோல மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் விஜயராஜா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இவர்கள் தனித்தனியே தொடர்ந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 சுங்கச்சாவடிகள் அமைந்த பகுதி தேசியநெடுஞ்சாலை பகுதியா? அல்லது மாநில நெடுஞ்சாலை பகுதியா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் மாநில நெடுஞ்சாலை என பதிலளிக்கப்பட்டது. இதற்கு மாநில நெடுஞ்சாலைகளென்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், தமிழக சாலை மேம்பாட்டு கழக கண்காணிப்பு பொறியாளரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.


Tags : branch ,Madurai ,High Court ,Tamil Nadu ,Madurai Branch ,State High Court , Madurai, toll , High Court Branch, Government of Tamil Nadu, State Highway
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...