×

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுடெல்லி: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், பியூஸ் கோயல் மற்றும் நரேந்திர தோமர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயம் உரித்து கண்ணீர் வரவழைத்த காலம் மாறி, தற்போது வெங்காயம் வாங்குவதற்கு கண்கலங்க வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் பெரிய வெங்காயம் அதிகளவு விளைகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் முக்கிய இடம் வகிக்கிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக பல விவசாயிகள் வெங்காய சாகுபடியை கைவிட்டனர். வெங்காயம் சாகுபடி செய்த பியிர்களும் கனமழை மூழ்கியது.

இதனால் தற்போது நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 90 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வரத்து இருந்த நிலையில், தற்போது வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. தரத்துக்கு ஏற்றவாறு பல்லாரி வெங்காயம் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ30க்கு விற்பனை செய்து வந்த காலம் மாறி தற்போது, 100 ரூபாயை தாண்டியுள்ளது. சென்னை கோயம்பேட்டியில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இந்தியா வந்தடைவதற்கு முன்னதாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகளும் விலை குறைப்பது தொடர்பாக கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் முக்கிய மத்திய அமைச்சர்களும், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இறைக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை எவ்வாறு பிரித்து மாநிலங்களுக்கு அனுப்பலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : cabinet meeting ,onion price rise ,Amit Shah , Onion price hike, Amit Shah, Union Cabinet meeting
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...