நாகை மருத்துவ கல்லூரியை இடமாற்றக் கோரி வழக்கு: டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாகையில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறைக்கு மாற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க மாநில அரசின் பங்களிப்போடு 75 புதிய மருத்துவ கல்லூரிகளை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க 21.66 ஏக்கர் நிலம் ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து நாகைக்கு பதில் மிகவும் பின்தங்கிய, மருத்துவ வசதிகள் இல்லாத மயிலாடுதுறை வருவாய் மண்டலத்திற்குரிய நீடூர் கிராமத்தில் கல்லூரியை அமைக்க உத்தரவிட கோரி குத்தலாம் தொகுதியுடைய திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஆட்சியருக்கு எதிராக திட்டமிடப்பட்ட கல்லூரியை நீடுர் கிராமத்தில் மாற்றி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: