தொடர் போராட்டங்களுக்கு பிறகு வைகை அணையின் 58-ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தொடர் போராட்டங்களுக்கு பிறகு வைகை அணையில் இருந்து 58-ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 58-ஆம் கால்வாய் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. சோதனை அடிப்படையில் மட்டுமே  தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். வைகை அணை நீர்மட்டம் 67 அடியை கடந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளதால், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மூல வைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு அணை மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து உள்ளது. தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 68 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும், நிரந்தர அரசாணை கோரியும் பாசன விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று தடையை மீறி திருமுருகன் கோயில் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தன. இதனால் வைகை அணையில் இருந்து 58-ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: