நீர்வழி தடங்கள் சீரமைக்காததால் பல்லாங்குழியான பழையபேட்டை- திருப்பணிகரிசல்குளம் இணைப்பு சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பேட்டை:  நீர்வழிதடங்கள் தூர்வாரப்படாததால் சாலையில் கரைபுரளும் மழைநீரால் பல்லாங்குழியான பழையபேட்டை-திருப்பணிகரிசல்குளம் இணைப்பு சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.நெல்லை பேட்டை பகுதியின் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு  பழையபேட்டை-திருப்பணிகரிசல்குளம் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இவ்வழியாக திருப்பணிகரிசல்குளம், வெட்டுவான்குளம், வடுகன்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் டவுன் மற்றும் நெல்லைக்கு செல்வதற்கும், டவுன், பழையபேட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதியிலிருந்து பேட்டை கல்லூரி, தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என அனைத்து தரப்பினரும் இணைப்பு சாலை மூலம் பயனடைந்து வந்தனர்.

பேட்டையில் போக்குவரத்து தடை ஏற்படும்போது டவுன் மற்றும் பிறபகுதிகளுக்கு செல்ல மாற்று சாலையாக இந்த சாலை விளங்குகிறது. இச்சாலையையொட்டி வேட்டைகாரன்குளம் உள்ளது. இக்குளம் நிரம்பி உபரிநீர் இச்சாலையோர ஓடை வழியாக வெளியேறி கருவேலன்குளத்தினை சென்றடையும். இந்த நீர்வழிதடம் தூர்வாரப்படாததால் உபரிநீர் திருப்பணிகரிசல்குளம் பழையபேட்டை இணைப்பு சாலையை ஆக்கிரமித்தவாறு செல்வதால் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதுதவிர கருவேலன் குளம் மதகுநீர் இச்சாலையை கடந்து திருப்பணிகரிசல்குளம் வெள்ளோடையை சென்றடையும். அவ்வாறு செல்லும் வழியில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்காததால் உபரிநீர் சாலையை கடந்து செல்லும் பகுதியில் முற்றிலும் அரிப்பு ஏற்பட்டு பெரும்பள்ளம் காணப்படுகிறது. வாகனங்கள் விபத்தில் சிக்காமல் தவிர்த்திடும் விதமாக சாலையின் இருபுறமும் முட்செடிகள் நட்டு பொதுமக்கள் தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் இப்பகுதியில் 3 தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்வழித்தடத்தை சீரமைத்திடவும், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திட வேண்டுமென்பது வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: