வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் கிலோ ரூ.550க்கு விற்பனை: வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி  தினசரி மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து  மிகவும் குறைவாக  இருப்பதால்,  ஒரு கிலோ ரூ.550க்கு விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் உள்ள காந்தி மற்றும் திரு.வி.க., தேர்நிலை  காய்கறி மார்க்கெட்டுகளுக்கு,  உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு  வகையான காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில்  முருங்கைக்காயானது பெரும்பாலும், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும்  திண்டுக்கல், கொடைரோடு, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களில்  இருந்து விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது.  இந்த ஆண்டில்  தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில், பொள்ளர்சசி   மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகமாக இருந்தது. அந்நேரத்தில்  வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. பின் கடந்த மாதம் மூன்றாவது  வாரத்திலிருந்து, தென் மாவட்ட பகுதிகளில் முருங்கைக்காய் வரத்து மிகவும்  குறைந்தது.

 கடந்த இரு வாரமாக தென்மாவட்ட பகுதிகளில்  வடகிழக்கு பருவமழை பல  நாட்கள் தொடர்ந்து  பெய்ததன் காரணமாக, முருங்கை மரத்தில் பூக்கும் பூக்கள்  உதிர்ந்ததால் அதன் காய்ப்பு தன்மை  குறைந்தது. கடந்த 2  வாரத்திற்கு முன்பு,  முருங்கைக்காய் வரத்து குறைவால், அந்நேரத்தில்  ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில  நாட்களாக முருக்கைக்காய் வரத்து மிவும் குறைவால் தட்டுப்பாடு அதிகரித்தது.   இதையடுத்து கர்நாடகா  உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து  முருங்கைக்காய்கள் ஆர்டர் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் வியாபாரிகள்  தள்ளப்பட்டனர். இதில் நேற்று மார்க்கெட்டுக்கு, வெளி மாநில பகுதியிலிருந்து  விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறைவான எண்ணிக்கையிலான முருங்கைக்காய்  விரைவாக விற்பனையாகியது.  அதிலும் முதல் தரம் முருங்கைக்காய்  ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.550 வரையிலும். இரண்டாம் தரம் ரூ.400 முதல்  ரூ.450 வரையிலும் என கூடுதல் விலைக்கு  விற்பனையாகியுள்ளது. மார்க்கெட்டில் சில கடைகளில் இருந்த முருங்கைக்காயை  வாங்க வந்த வாடிக்கையாளர்கள், அதன் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்து  திரும்பி சென்றனர். வரும் நாட்களில் சுபமுகூர்த்த நாட்கள் இருப்பதால், மேலும்  கூடுதல் விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது என்று, வியாபாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: