சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிக்கையில், குமரிக்கடல் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். தென் தமிழகத்தை பொறுத்துவரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாட்டம் கடவூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், குமரி மாவட்டம் கொட்டாரம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வீரகனூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், விருதுநகர் மாட்டம் கோவிலங்குளம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சத்திரப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு மற்றும் கரூர் மாவட்டம் பாலவிடுதி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கும், நாளை லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: