பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழக அரசு: நவ.9-ல் விசாரணை

டெல்லி: சிலைக்கடத்தல் தடுப்பு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது. அவரது ஓராண்டு பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று கூறி சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும், ஐஜி பொன்.மாணிக்கவேல் உச்ச நீதிமன்ற உத்தரப்படி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டு 5 நாட்கள் ஆன நிலையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களும் கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வில்லை. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டபோது கையாண்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பொன்.மாணிக்கவேல் தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளது. எனவே அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணக்களை தமிழக அரசிடம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் வரும் 9-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Related Stories: