×

வாலிபர்களை வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (23). அண்ணாநகர் தனியார் நிறுவன கேஷியர். இவரது நண்பர் அசாருதீன் (23). அதே நிறுவன சர்வீஸ் பாய். நேற்று முன்தினம் மாலை, இருவரும் கோயம்பேடு பகுதி ஓட்டலில் உணவு வாங்க நடந்து சென்றனர். அப்போது 2 பைக்கில் வந்த கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி, பணம் கேட்டு மிரட்டினர். அசாருதீன் பணம் தர மறுத்ததால் அவரது இடது கையின் முட்டியில் ஒருவர் அரிவாளால் வெட்டினார். இதை தினேஷ்குமார் தடுக்க, அவரது இடது கண்ணில் ஒருவர் கையால் குத்தினார். இதில் தினேஷ், அசாருதீன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த கும்பல் பைக்கில் தப்பி சென்றுவிட்டது. புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மாடாவிக்கி (எ) விக்னேஷ் (24), தியாகராஜன் (41), மதுரவாயல், தனலட்சுமி நகரை சேர்ந்த அருண் (எ) ஆரோக்கியராஜ் (19) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

கார் மோதி மூதாட்டி பலி: அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, பி.பிளாக்கை சேர்ந்தவர் அலமேலு (65). கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.  நேற்று அதிகாலை அண்ணாநகர், விநாயகபுரம் சிக்னல் எதிரே அலமேலு சாலையை கடந்தபோது அவர் மீது அவ்வழியாக வந்த கார் மோதியதில்  சம்பவ இடத்தில் பலியானார்.  புகாரின்பேரில், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (23) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.  „ தண்டையார்பேட்டை  வினோபாநகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (38).  எலக்ட்ரீஷியன்.  இவரது மனைவி மகேஸ்வரி (34).  இவர்களுக்கு சஞ்சனா (11) என்ற மகள் உள்ளார்.  
கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு மாலை போட்ட தாமோதரன்  நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனே மகேஸ்வரி கோபித்துக் கொண்டு சொந்த ஊரான மதுரைக்கு செல்ல கோயம்பேடு சென்றுள்ளார். இதனால், மனம் உடைந்த தாமோதரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி, ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வாலிபர்களிடம் வழிப்பறி: பம்மல், சங்கர் நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (31). அதே பகுதி 39வது தெருவை சேர்ந்தவர் பிரவீண்குமார் (27). நேற்று இருவரும் பம்மல் நாகல்கேணி பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் அருகே நடந்து சென்றனர். அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் திடீரென பிரவீண்குமார் மற்றும் ஜெயச்சந்திரனை தாக்கி 2 செல்போன், ஒரு சவரன் தங்க மோதிரம் மற்றும் 1000 பணத்தை பறித்து சென்றனர். புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் செயின் பறிப்பு: திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி ரமணி (54). நேற்று காலை  இவரது வீட்டிற்கு வாடகைக்கு வீடு பார்க்க ஒரு நபர் வந்துள்ளார். அவருக்கு 2வது மாடியில் உள்ள வீட்டை காட்ட ரமணி அழைத்து சென்றுள்ளார். உள்ளே வந்த அந்த ஆசாமி திடீரென ரமணி கழுத்தில் கிடந்த 7 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமி குறித்து விசாரிக்கின்றனர்.
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது:  சென்னை கொளத்தூரை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி (26) என்பவரும் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புண்ணியமூர்த்தி வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டது இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் இளம்பெண் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை விழுப்புரத்தில் கைது செய்தனர். „அம்பத்தூர், விவேகானந்தர் நகர், எம்.எம் நகர் குடியிருப்பை சேர்ந்த ராகேஷ்வர்ஷன் (40) என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் மெரினா கடற்கரையில் குளித்தபோது கடலில் மூழ்கி மாயமானார். „நங்கநல்லூர், நேரு காலனி, 19வது தெருவை சேர்ந்த ரூபன் (29) நேற்று முன்தினம் அதே பகுதி டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு அருகில் உள்ள குளத்தில்  குளித்தார். அப்போது போதையில் மூச்சு திணறி ரூபன்  பரிதாபமாக பலியானார். „ சென்னை எம்.கே. நகரை சேர்ந்த முருகேசன் (20) என்பவரது  செல்போனை பறித்து சென்ற 2 பேர் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

„ நீலாங்கரையை சேர்ந்த கன்னியப்பன் (22) என்பவரது செல்போனை பறித்து சென்ற 2 பேர் குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  „மணப்பாக்கம் சத்யா நகரை சேர்ந்த டாக்டர் விஜயகுமார் (28) என்பவர் தாங்க முடியாத வேதனை இருப்பதால் விவரிக்க முடியவில்லை என எழுதி வைத்துவிட்டு நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : assault , Youth arrested, 3 arrested
× RELATED போக்சோவில் வாலிபர் கைது