×

ஓட்டலுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு

பெரம்பூர்: பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி, 20வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் யோகேஸ்வரன் (19). இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஜம்புலிங்கம் மெயின் ரோடு வழியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், லோகேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் யோகேஸ்வரனை வெட்ட பாய்ந்தார். இதனால் பயந்துபோன யோகேஸ்வரன் ஓட்டம் பிடித்து தனியார் ஓட்டலுக்குள் புகுந்தார். இருப்பினும் அவரை கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதை பார்த்து ஓட்டலில் இருந்தவர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லோகேஷை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், யோகேஸ்வரன் நண்பர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமாரின் நண்பர்களான தினேஷ் என்ற அக்யூஸ்ட் தினேஷ், ஆகாஷ் உள்ளிட்ட சிலர் யோகேஸ்வரனை வழிமடக்கி அவரது நண்பர்கள் குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஓடஓட விரட்டி வெட்டியது தெரியவந்துள்ளது. அக்யூஸ்ட் தினேஷ் மீது ராஜமங்கலம், பெரவள்ளூர், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்யூஸ்ட் தினேஷ், ஆகாஷ் உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை தாராளம்
பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி, 32வது தெரு, 20வது தெரு மற்றும் லோகோ ரயில் நிலையம் பகுதிகளில் தாராளமாக கஞ்சா கிடைப்பதால் பல்வேறு பகுதியில் உள்ள ரவுடிகள் அப்பகுதிக்கு வந்து கஞ்சா புகைப்பதும், காலியிடங்களில் அரட்டை அடிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. மேலும் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : cafe , Cafe, young men, cut
× RELATED திண்டிவனம் அருகே பெண்ணை மறுமணம்...