போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த போலீஸ்காரர் கைது: மேலும் 6 பேரிடம் தொடர் விசாரணை

சாயல்குடி:  போலீஸ் பணிக்கான தேர்வில் சிலர் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் வழங்கியதாகவும், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு போலி சான்று கொடுத்து போலீஸ் வேலையில் சேர்ந்ததாகவும் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.  அதன் அடிப்படையில் ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் கமுதி அருகே ஓ.கரிசல்குளத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (30), அவரது நண்பர் மணிராஜன் (23) என்பவருக்கு கபடி வீரர் என போலி விளையாட்டு சான்றிதழ் பெற்று தந்தது தெரியவந்தது. இந்தச் சான்றிதழை சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் (55) என்பவரிடம் ₹50 ஆயிரம் கொடுத்து பெற்றதாக கூறப்படுகிறது.

தேசிய அளவிலான கபடி போட்டியில் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மணிராஜன் பங்கேற்றதாக போலி சான்றிதழை சீமான் வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த போலி சான்றிதழ் மூலம் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் மணிராஜன் 2ம் நிலை காவலராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார்.இந்த தகவலறிந்த ராமநாதபுரம், கேணிக்கரை போலீசார், போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஆயுதப்படை காவலர் மணிராஜன், போலி சான்றுக்கு உதவிய ராஜீவ்காந்தி, சீமான் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். நேற்று அவர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தில் நடந்த சீருடை பணியாளர் தேர்வில் போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக வந்த புகாரை தொடர்ந்து மேலும் 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: