×

பிரதமர் மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் அளித்த கோரிக்கை கடிதத்தை வழங்கினர்

சென்னை: திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய, தமிழக நலன்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களின் நலன் குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தனர். அத்துடன், கலைஞர் எழுதிய ‘குறளோவியம்’ நூலையும், முரசொலி வெளியிட்ட ‘நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் 2019’ ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கடந்த 70 ஆண்டுகளில் துரதிருஷ்டவசமாக மாநில உரிமைகள் பெருமளவு பறிக்கப்பட்டுள்ளன. ஆகவே, கூட்டாட்சி தத்துவத்தை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிமையளிக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர திமுக வலியுறுத்துகிறது. நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும்.மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக அதிகரித்திட வேண்டும்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே 5 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த பணிகளை உடனே நிறுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.  27 சதவீத இட ஒதுக்கீட்டினை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்துவதுடன், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரித்திட வேண்டும். மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு அமல் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.மத்திய அரசு அலுவலகங்களின் கடித தொடர்புகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ் மற்றும் அரசியல் சட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளை பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  சேலம் உருக்காலையின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க ‘பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு’ சேலம் உருக்காலை தனியார் மயமாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம், சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது. இந்த திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மேலும் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

  ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு பெற்று கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் ஈழத்தமிழர்களையும், அவர்களின் அரசியல் சட்ட உரிமைகளையும் பாதுகாத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இலங்கையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்திய மீனவர்கள் மீது அதிகரித்துள்ள தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், நிதி சுதந்திரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் விதத்தில் 15வது நிதி ஆணையத்தின் ‘அதிகார வரம்பு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே ‘அதிகார வரம்பினை’ கீழ்கண்டவாறு மாற்றியமைக்க வேண்டும்: மத்திய நிதியினை முறையாக வழங்குவதற்கு மனித மேம்பாட்டு அளவுகோல் அல்லது தனிநபர் உற்பத்தி போன்ற உறுதியான நட வடிக்கைகள் போன்ற முக்கிய ஊக்கமளிக்கும் காரணிகள் மூலம் எதிர்கால நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) மாநிலத்தின்  மொத்த மாநில உற்பத்தியின் (ஜிஎஸ்டிபி) பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ அல்லது மத்திய வரி வருவாய்க்கான  பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு விகிதத்திற்கான குறைந்தபட்ச வரம்பை நிச்சயிப்பது,
 மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ அல்லது மத்திய வரி வருவாய்க்கான பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு விகிதத்திற்கான அதிகபட்ச வரம்பை நிச்சயிப்பது, சமமான பங்கு தொடர்பான கவலைகளை முழுமையாக தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

 சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள 7,825 கோடி ரூபாய் நிதியினை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த உதவிட வேண்டும்.இந்தகோரிக்கைகள் அனைத்தையும் தயவு கூர்ந்து நேர்மறைக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்து கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் நிறைவேற்றிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MPs ,DMK ,Mukherjee ,Stalin , DMK MPs , PM Modi, Stalin, letter
× RELATED வரும் 26ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில்...