சாலை விபத்து விழிப்புணர்வுவை வலியுறுத்தி முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர்: பிப்ரவரி 2ல் தொடக்கம்

மும்பை : சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சச்சின், லாரா, சேவக் உட்பட முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. ‘சாலை பாதுகாப்பு உலக தொடர்’ என்ற பெயரில் நடக்க உள்ள இந்த தொடர் வரும் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும். நவி மும்பை, மும்பை, புனே ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 5 நாடுகள் பங்கேற்க உள்ளன.  முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், சேவக், லாரா, பிரெட் லீ, தில்ஷன் உட்பட முன்னாள் வீரர்களும் விளையாட உள்ளனர். இதற்கான அறிமுக விழா மும்பையில்  நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரரும் ஒலிம்பிக்ஸ் 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றவருமான யோஹன் பிளேக் கலந்து கொண்டார். போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கான  சீருடை, கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகன் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிக அதிகம். எனவே, இது குறித்து இந்திய மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். எனக்கு பிடித்தமான கிரிக்கெட்    விளையாட்டின் மூலம் இத்தகைய  விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அல்லது பெங்களூரு அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரரும், ஜமைக்காவை சேர்ந்தவருமான கிறிஸ் கேல் விளையாடியுள்ளதே அந்த ஆசைக்கு காரணம். 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் தங்கம் வெல்வதுதான் எனது இலக்கு. அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.

ஒலிம்பிக் போட்டியில் இருந்து மும்முறை தாண்டுதல் உட்பட சில போட்டிகளை நீக்கி இருப்பதன் மூலம் சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டின் கோயி தடகளப் போட்டிகளை  சீரழிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு தடகள விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறேன். அதன் பிறகு சில மாதங்களில்  மீண்டும் இந்தியா வருவேன். இங்கு திறமையான தடகள வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட உள்ளேன். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. சமீபத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாசை சந்தித்தேன். அவர் திறமையானவர் மட்டுமல்ல நம்பிக்கையோடு இருப்பவர். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் சாதிப்பார்.     

இவ்வாறு யோகன் தெரிவித்தார்.    

சாலை விபத்தின் வேதனை எனக்கு நன்றாக புரியும்...                             

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறுகையில், ‘சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன்  அவசியத்தை மற்றவர்களை விட நான் அதிகம் உணர்ந்தவன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்தான்.  எனவே அந்த வலியும் வேதனையும் எனக்கு நன்றாகத் தெரியும். சாலை விழிப்புணர்வு குறித்த பரப்புரை அவசியமானது. வாகனத்தை நன்றாக ஓட்டுவதற்கான அனுபவம்,  உரிமம் உள்ளவர்களிடம் மட்டுமே வாகனத்தை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: