1 கோடி கடன் தராததால் பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டல் வங்கியில் புகுந்து மேலாளர், இடைத்தரகருக்கு கத்திக்குத்து

கோவை : கடன் வழங்காததால் ஆத்திரமடைந்த தொழில் அதிபர் ஒருவர் கோவையில் உள்ள வங்கி ஒன்றில் புகுந்து ெபாம்மை துப்பாக்கி காட்டி மிரட்டி மேலாளர் மற்றும் இடைத்தரகரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை அடுத்த சோமையம்பாளையம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேலன் (44). இவர், கோவை ஒண்டிப்புதூரில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தொழிலை விரிவுபடுத்துவதற்காக 1 கோடி கடன் தொகையை வங்கியில் வாங்க அவர் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பரும், இடைத்தரகருமான குணபாலன் என்பவரை அணுகியுள்ளார். அப்போது குணபாலன், தனக்கு 3 லட்சம் கொடுத்தால் கோவை திருச்சி ரோடு, சுங்கத்தில் உள்ள கனரா வங்கியில் கடனுதவிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாகவும், இதனைத்தொடர்ந்து அவர் குணபாலனுக்கு 3 லட்சத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாகியும் கடன் வாங்கித் தரவில்லை.

இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வங்கிக்கு நேரில் சென்று மேலாளரிடம் பேசலாம் என்று குணபாலன் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் குணபாலன் வங்கி மேலாளரை சந்தித்து பேச சென்றிருப்பதாக வெற்றிவேலனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கிக்கு சென்ற அவர் 3 லட்சம் கொடுத்தும் கடன் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இடைத்தரகர் குணபாலனை தான் கொண்டு சென்றிருந்த பொம்மை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனை பார்த்த வங்கி மேலாளர் சந்திரசேகர் அவரை தடுக்க முயன்றுள்ளார். உடனே வெற்றிவேலன் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் குணபாலன், சந்திரசேகர் மற்றும் வங்கி ஊழியர் வசந்த் ஆகியோரை குத்தினார். மேலும் சரமாரியாக தாக்கினார். புகாரின்படி ரேஸ் கோர்ஸ் போலீசார், வெற்றிவேலனை கைது செய்தனர். அவரிடம் இருந்து  பொம்மை துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வெற்றிவேலன் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர்.

Related Stories: